காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது.
காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை,
பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின்
ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை
வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை.
இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும்
ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால்
எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல்
பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து
முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு
செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை
ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச்
செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள
முடிகின்றது.
சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில்
சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள
காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை
இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை
இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும்
(5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற
உணவாய் கருதப்படுகின்றது.
ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 16 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு
ரூ. 7 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால்
ரூ. 9 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை
உற்பத்தி செய்து ரூ. 28க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 12 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக
இலாபம் கிடைக்கும்.
No comments:
Post a Comment